சட்டமன்றத்தில் ஜெ. படத்திறப்பு அழைப்புக்கு பதிலேதும் சொல்லாமல் தவிர்த்த பிரதமர் மோடி, அதே ஜெ.வின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி சென்னை வருகிறார். அவரது வருகை ஏகப்பட்ட பூகம்பங்களை தமிழகத்தில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம்வரை பிரதமர் அலுவலகம் வேறு மாதிரியான சிந்தனையில் இருந்தது. இந்த வாரம் அந்த சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் பிரதமர் தமிழகம் வர சம்மதித்துள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரம். பிரதமரை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு கூப்பிட்டார்கள் தமிழக ஆட்சியாளர்கள். சட்டமன்றத்தில் ஜெ.வின் படத்திறப்பு விழாவிற்கு கூப்பிட்டார்கள். டிசம்பர், ஜனவரி என இரண்டு மாதமும் தமிழகத்திலிருந்து வந்த அழைப்புகளுக்கு "நோ' என சொன்னார் பிரதமர். 24-ம் தேதி சென்னையில் அ.தி.மு.க.வின் கட்சி அலுவலகத்தில் ஜெ.வின் வெண்கலச் சிலையை திறந்து வைக்கிறார்கள். அதற்கும் வாருங்கள் என அழைத்தார்கள். அதையும் மறுத்துவிட்டார் பிரதமர். ஜெ.வின் படத்திறப்புக்கும், சிலை திறப்புக்கும் ஜெ. மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் பிரதமர் வரவில்லை. இதெல்லாம் கடந்த வாரம் வரை டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் நடந்த நிலவரங்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi-eps.jpg)
கடந்த 18-ம் தேதி வரை பிரதமரின் வருகைபற்றி பிரதமர் அலுவலகம் வாய் திறக்கவில்லை. ஆனால் 19-ந்தேதி அறிவிப்பு வந்தது. 24-ம் தேதி பிரதமர் விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு என்கிற கடற்படை தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். ஒரு லட்சம் பேருக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை துவக்கி வைக்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தின் செயல் அதிகாரியும், முன்பு ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலருமாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீன்நாயர் செய்து வருகிறார் என கோட்டை வட்டாரம் தெரிவிக்கின்றன.
"ஏன் இந்த மாற்றம்' என பிரதமரை ஓ.பி.எஸ்.சுடன் சேர்ந்து நான்கு முறை சந்தித்த அ.தி.மு.க. எம்.பி., மைத்ரேயனை கேட்டோம். ""இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் என்பது ஜெ. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டம். அந்த திட்டத்தை துவக்க தமிழக அரசு அழைப்பு அனுப்பியது. தனது நண்பரான ஜெ. பெயரில் ஒரு லட்சம் ஸ்கூட்டி பெண்களுக்கு வழங்குவது என்பது ஒரு முன்னோடி திட்டம். அதை மோடி இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதால், அவர் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கலாம்'' என கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajbavan.jpg)
சமீபகாலமாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருக்கும் மோடி உதவினார் என்பதால், அவரது பெயர் தமிழகத்தில் கெட்டுப் போய் இருக்கிறது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. ""அந்த இமேஜையும் சரிசெய்ய விரும்புகிறார். அதனால் அரசு விழாவில் -அதுவும் ஜெ. விரும்பிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விழாவில் கலந்துகொண்டால் தன்னுடைய இமேஜும் பா.ஜ.க.வின் வாக்குகளும் தமிழகத்தில் உயரும் என மோடி நினைக்கிறார். அதனால்தான் அவர் வருகிறார்'' என்கிறது மத்திய உளவுத்துறை வட்டாம். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் எடப்பாடி அரசுக்கு எந்தவிதத்திலும் பக்கபலமாக இருப்பதே பிரதமரின் இமேஜை காப்பாற்றும் என்றும் டெல்லியில் ஒரு தரப்பு சொல்கிறது.
24-ம் தேதி விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் அன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார். ராஜ்பவனில் தங்கும் மோடிக்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். "நான்வெஜ் பிரியரான மோடிக்காக சிறப்பு உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன' என்கிறது கவர்னர் மாளிகை வட்டாரங்கள். அண்மைக்காலமாக ராஜ்பவனில் அசைவத்துக்கு தடை விதித்திருக்கிறார் ஆளுநர்.
24-ம் தேதி மாலை பிரதமரை கவர்னர் மாளிகையில் சந்திக்க பலர் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் ஆடிட்டர் குருமூர்த்தி.
ஆடிட்டர் தவிர ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் கவர்னர் மாளிகையில் இருந்து தமிழக அரசியலில் நடத்தப்போகும் அசைவுகள் பற்றிய முழு பஞ்சாயத்தை நடத்தவுள்ளார் மோடி என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.
ஆனால், பா.ஜ.க.வின் இணையமைச்சர் பொன்னார் மட்டும், ""என்னிடம்கூட தமிழக அரசியலை பற்றி மோடி பேசமாட்டார். அமித்ஷாவிடம் பேசிக்கொள் என்பார். அப்படிப்பட்டவர் ஓ.பி.எஸ்.சிடம் அணிகள் இணைப்பு பற்றி பேசியிருக்கமாட்டார்'' என்கிறார் மாறுபட்ட குரலில். அ.தி.மு.க. விவகாரத்தில் பிரதமர் தலையிடுவது தமிழக பா.ஜ.க.வினர் பலருக்கும் விருப்பமில்லையாம்.
நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ். வட்டாரம், ""முதல்வர் உட்பட எந்த பதவியிலும் இல்லாத நேரத்தில் ஓ.பி.எஸ்.சை மோடி சந்தித்து பேசியபோது, அணிகளை இணைக்கச் சொன்னது உண்மை. சசிகலா குடும்பம், கலைஞர் குடும்பம் இரண்டையும் தமிழக அரசியலை விட்டு நீக்கவேண்டும் என உணர்ச்சிகரமாக மோடி ஓ.பி.எஸ்.சிடம் பேசினார். அதை பொன்னாரிடம் மோடி பேசியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது'' என்கிறது.
""பிரதமர் அப்போது பேசியதை இப்போது வெளிப்படுத்தியுள்ள ஓ.பி.எஸ்., தற்போது எடப்பாடியாலும் தினகரனாலும் பழிவாங்கப்பட்டதாக உணர்கிறார். அதற்கு மோடி மூலம் பரிகாரம் காண விரும்புகிறார். 24-ம் தேதி நேரில் சந்தித்து தனது குறையை சொல்வார் என்றது. மோடியை எடப்பாடி சந்தித்து ஓ.பி.எஸ். பாணியில் தனது பக்கத்து நியாயத்தை சொல்வார்.
அதே நேரத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு மோடிக்கென தனி திட்டம் இருக்கிறது. ரஜினியின் ஆன்மிக அரசியல், பா.ஜ.க.வுடன் தேர்தல் களத்தில் கைகோர்க்காவிட்டால், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகியோரை ஒற்றுமைப்படுத்தி அவர்களுடன் கூட்டணி அமைக்கலாமே என்கிற பிளான் "பி' சமாச்சாரத்தையும் ஆக்டிவ்வாக வைக்கத்தான் மோடி வருகிறார்'' என்கிறார்கள் மேல்மட்டத்து ஆட்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02-21/modi-eps-n.jpg)